மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் யு.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி.வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.
இந்நிலையில், மகளிர் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், யு.பி.வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி பேடிங்கை தேர்வு செய்தது. யு.பி.வாரியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நாட்சிவெர் 45 ரன்களை அடித்தார்.
இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யு.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, நடப்பு தொடரில் தனது நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.