12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பரிசுகளை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு விழுக்காடு மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினியை விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக மாவட்டம்தோறும் அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களின் விவரங்களை சேகரித்து தலைமை அலுவலகத்திற்கு இம்மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வாட்ஸ் அப் மூலம் அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் அவசர தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மாவட்ட தலைவர்கள் தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது. அவர்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு எண் , பிறந்த தேதி, மதிப்பெண் சான்றிதழ் நகல் அல்லது ஆன்லைனில் வெளியான தேர்வு முடிவுகள், ஆதார அட்டை நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சேகரித்து, வரும் 20ம் தேதிக்குள், சென்னை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதனடிப்படையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து கல்வி உதவி தொகை மற்றும் பரிசுகளை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பின், அவர்களின் விபரங்களையும் திரட்டி, வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி, அடுத்த மாதம், சென்னை அல்லது திருச்சியில் நடத்தப்பட உள்ளதாகவும் அதில் கூடும் ரசிகர்களுக்கு மத்தியில், மாணவ – மாணவியருக்கு, தன் கையால் உதவித் தொகைகளை, விஜய் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.