மலையாள திரைப்பட இயக்குநர்களை நினைத்து மிகவும் பொறாமையாக இருக்கிறது என ஹிந்தி திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் புகழ்ந்துள்ளார்.
ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளுபவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன. இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றது. தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரது அடுத்த படமான ‘கென்னடி’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகவும் இப்படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், அனுராக் காஷ்யப், “மலையாள திரைப்பட இயக்குநர்களை நினைத்து மிகவும் பொறாமையாக இருக்கிறது. அவர்களது தைரியம், பிடிவாதம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுள்ள கேரள ரசிகர்கள் திரைப்படமாக்குதலில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்களை நினைத்து நான் மிகவும் பொறாமைப்படுகிறேன். சமீபத்தில் பிரம்மயுகம், மஞ்சுமல் பாய்ஸ் என்ற இரண்டு அட்டகாசமான படங்களைப் பார்த்தேன்.
குறிப்பாக மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநரின் நம்பிக்கை, கதை சொல்லல் முறையும் கமர்ஷியல் படங்களில் ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்தியாவில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை விட இது பெரியது. நம்பிக்கை மிகுந்த நம்பமுடியாத கதை சொல்லும் பாணி. இதை எப்படி தயாரிப்பாளரிடம் கூறி சம்மதிக்க வைத்தார் எனத் தெரியவில்லை. ஹிந்தியில் இதுபோல படங்களை ரீமேக்கில் மட்டுமே செய்கிறார்கள். சமீபத்திய 3 மலையாள சினிமாக்களை விட ஹிந்தி சினிமாக்கள் மிகவும் பின் தங்கியுள்ளன” எனக் கூறியுள்ளார். மேலும் மம்மூட்டியின் ‘காதல் தி கோர்’ படத்தினையும் பார்க்க ஆவலாக உள்ளதாக அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.